ஹர்திக் இல்லையென்றதுமே ஷமியும் சூர்யாவும் அணிக்குள் வருவார்கள் ஷர்துல் வெளியேறுவார் என்பது எதிர்பார்த்ததுதான். அதே நேரம் பாண்டியா காயமுறாமல் இன்று ஆடியிருந்தால் இன்றும் ஷமிக்கு பதில் ஷர்துல்லே ஆடியிருக்கும் வாய்ப்பு அதிகம். ட்ராவிட் – ரோஹித் கூட்டணியின் சமீப கால திட்டமிடலை தொடர்ந்து கவனித்து வந்தவர்களுக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்திருக்காது. ஹர்திக் அணிக்குள் இருக்கும் போது அணியின் பௌலிங் ஆப்ஷன் ஆறு பேராக இருக்கும், ஏனெனில் யாராவது காயமானாலோ அல்லது அதிக ரன்களுக்கு போனாலோ இன்னொருவர் சமாளிப்பார். அப்படிதான் முந்தைய மேட்ச்சில் ஷர்துல் அடிவாங்கவும் இரண்டே ஓவர்கள் மட்டும் கொடுத்ததோடு நிறுத்தி மற்றவர்களை வைத்து முடிக்க முடிந்தது, ஹர்திக் காயமான அன்று வசதியாக ஷர்துல் வைத்து மிச்ச ஓவர்களை முடிக்க முடிந்தது.
இந்த இடத்தில் ஷர்துலுக்கு பதில் ஷமியை கொண்டு வந்திருக்கலாம், ஆனால் பேட்டிங் 5ல் முடிந்து 6,7 ஹர்த்திக், ஜடேஜா என இரண்டு ஆல்ரௌண்டர்களும், பின்னர் 4 பேர் பேட்டிங் இல்லாதவர்களும் என பெரிய டெய்லாகிவிடும், அதை மாற்ற இந்த சமன்பாட்டுக்குள் ஷர்துல் வருகிறார், ஷர்துல் ஹர்திக் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு நல்ல பேட்டிங் செய்யக்கூடியவர், அது அணிக்கு ஒரு பேலன்சை தரும். அதனால் யார் வெளியே போவார் என்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் ஷமி அல்லது சிராஜ் வெளியேற வேண்டும், ட்ராவிட் திட்டத்தில் சிராஜ்க்கு முன்னுரிமை கொடுத்தனர், ஷமி வெளியே நின்றார், வெளிநாட்டில் நடந்தால் பும்ரா, ஷமி, சிராஜ் மூவரும் இருந்திருப்பர். இதே நிலைதான் அஷ்வினுக்கும், ஜடேஜா போன்ற ஆல்ரௌண்டர் இருப்பதால் அஷ்வின் இன்னொரு இடத்துக்காக குல்தீப்புடன் போட்டியிட வேண்டும், ஆனால் குல்தீப் இருக்கும் ஃபார்மில் அவரை பெஞ்சில் உட்கார் வைப்பது முடியாது, அதனாலே அஷ்வின் மூன்றாவது ஸ்பின்னர் ஆனார், ஸ்பின் அல்லாத பிட்ச்சில் பெஞ்சில்தான் அமர வேண்டும்.
ஹர்திக் இல்லாத போது அவருக்கு பதில் மாற்றாக சூர்யா உள்ளே வரும்போது, பேட்டிங் இன்னும் பலமாகிறது, அதனாலே ஷர்துல்லின் பேட்டிங் சேவை இல்லாமலே சமாளிக்க முடியும், அதனால் சர்துல் இடத்தில் பேட்டிங் இல்லாத முழு பௌலரை எடுக்க முடிகிறது, அது ஷமியாக இருந்தார். இம்மாதிரி சூழ்நிலைக்கு ஏற்றவாறு, பிட்ச்சுக்கு ஏற்றவாறு வீரர்களை மாற்றி ஆடுவதுதான் ட்ராவிட் – ரோஹித்தின் திட்டம், எப்படியும் பெஞ்சில் இருப்பவர்களுக்கு திரும்ப கேம் கிடைக்கும்.
ஷமி விக்கெட் எடுத்ததெல்லாம் ஆச்சரியமே இல்லை, ஏனெனில் ஷமியின் திறமை அப்படிப்பட்டதுதான். அன்றைய நாளில் ஆட்டம் பிடித்துவிட்டால் ஷமியின் பந்துகள் மகுடிக்கு கட்டுபட்ட பாம்பாக படமெடுத்து ஆடும், விக்கெட்களை சடுதியில் எடுத்து ஆட்டத்தை புரட்டி போடுவார். ஆனால் எல்லா நாளும் இது நடக்குமென்று எதிர்பார்க்க முடியாது, அது ட்ராவிட் – ரோஹித்துக்கும் தெரியும், இல்லாவிட்டால் எல்லா நாளும் 5 விக்கெட்டோ, 4 விக்கெட்டோ எடுத்து மேட்ச்சை மாற்றக்கூடிய பௌலரை வெளியே வைக்க அவர்களுமே விரும்ப மாட்டார்கள். எப்படியோ, ஷமியின் வரவு இந்திய பௌலிங்கை இன்னும் பலப்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஸ்பின் ஆடுகளங்களில் என்ன செய்ய போகிறார்கள், யாருக்கு பதில் அஷ்வின் வரபோகிறார் என்பது இன்னொரு இனிய தலைவலி.
Vishvaksen fb