இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக இலங்கை மின் சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா கூறியுள்ளார்.
இந்த திட்டம் இலங்கையின் மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான மிகப் பெரிய நீண்டகால முயற்சியாக கருதப்படுகிறது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பரவலாக மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் இதன் மூலம் இந்தியாவுக்கு இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதற்கும் இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கும் இலஙகைக்கும் இடையிலான மின் விநியோக கட்டமைப்பை இணைப்பது தொடர்பான உடன்படிக்கை 2010 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்டது.
இந்த திட்டத்திற்கு இந்தியா ரூபாய் மதிப்பில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டதுடன் ஆயிரம் மெகா வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவின் கடல் மட்டத்தில் இருந்து 25 மீற்றர் ஆழத்தில் 500 மீற்றர் இடைவெளியில் கேபிள் இணைப்புகள் அமைக்கும் சாத்தியங்கள் தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இலங்கை – இந்தியா இடையிலான இந்த மின் இணைப்பு கட்டமைப்பானது 360 கிலோ மீற்றர் தொலைவை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டது.
இந்த மின் இணைப்பானது தமிழகத்தின் மதுரையில் இருந்து இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரத்திற்கும் செல்லும் வகையில் அமைக்கப்படலாம் என அப்போது கூறப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்த திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.