ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி என்பது முழுமையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சேரும். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மீசையும் இருக்கிறது, வேட்டியும் இருக்கிறது, ஏன் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என தெரியவில்லை. அவரை பொருத்தவரை எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறவர், மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர், சசிகலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று முதலமைச்சர் ஆக உயர்ந்தவர். அவர் கொஞ்சம் நாகரீகமாக பேச வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம்தான் இந்த தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மீதும் காங்கிரஸ் பேரியக்கம் ராகுல் காந்தி மீதும் மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிசேரி சேர்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தென்னரசு, இரண்டு நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு முடிந்த உடனே தேர்தல் நல்ல முறையில் நடந்தது, தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது எந்த தவறும் தொகுதியில் நடக்கவில்லை என சொல்லி இருந்தார். ஆனால், அவர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் இன்று மாற்றி சொல்கிறார். அதிமுகவின் எதிர்காலம் குறித்து சொல்வதற்கு நான் ஜோசியன் அல்ல. இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ அவற்றை கண்டிப்பாக செய்வேன். மறைந்த மகன் திருமகன் எம்எல்ஏவாக இருந்தபோது முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை முதலமைச்சரிடம் சொல்லி இருந்தார். அந்த 10 திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு எவ்வளவு விரைவில் முடிகிறதோ அதை செய்வேன். முதலமைச்சர் முதன்மையாக சந்திக்க வேண்டும் எப்போது நேரம் கிடைக்கிறதோ உடனடியாக சந்திப்பேன். காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் இப்போது இருப்பவரே நன்றாக செயல்படுகிறார். எனக்கு அந்த பதவி கிடைக்குமா என்பது பற்றி பேச இப்போது நேரமில்லை. என் மகன் செய்த நல்ல காரியங்கள் காரணமாகவும் முதலமைச்சரின் நல்லாட்சிக்கு கொடுத்த அங்கீகாரம் காரணமாகத்தான் அதிகப்படியான வாக்குகள் பெற்றுள்ளேன். வாக்களித்த வாக்காளர்களுக்கு மிகப்பெரிய நன்றி. அவர்களுடைய குறைகளை போக்குவதற்கு பாடுபடுவேன். வாக்களிக்காத வாக்காளர்களுக்கும் நல்லதை செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோவை மக்களுக்கு சொன்னார். அதைப்போல வாக்களிக்காத மக்களுக்கும் நாங்கள் நல்லதை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.