தூய்மை பணியாளர் மீது கார் மோதியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மனைவி 37 வயதான சிவகாமி துப்பரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார் இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் வழக்கம் போல் திருவான்மியூர் ஆர். டி. ஓ. அலுவலகம் அருகே கிழக்கு கடற்கரை சாலை சிக்னல் சந்திப்பு அருகே தூய்மை பணியில் ஈடுபட்டார்.
அப்பொழுது திருவள்ளுவர் நகரை சேர்ந்த அஸ்வந்த் என்பவர் ஐ. டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வேலை முடித்துவிட்டு அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்நிலையில் அந்த நபர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சிவகாமி மீது மோதினார். அதில் அவர் கீழே விழுந்தார். அந்த சமயத்தில் பின்னால் திருவான்மியூரில் இருந்து நீலாங்கரை நோக்கி சென்ற சரக்கு லாரி சிவகாமியின் தலை மீது ஏறி இறங்கியது.
அந்த லாரி மேலும் ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.இந்த விபத்தில் சிவகாமி மூளை வெளியே வந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் திருவான்மியூர் பொலிஸார் விரைந்து வந்து பலியான சிவகாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொலிஸார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.