மட்டக்களப்பு கொழும்பு வீதியின் வாகநேரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்த சிலைகள் மற்றும் கட்டிடங்களை சேதமாக்கியோரை கைது செய்யுமாறு கோரி குறித்த பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது ஆலயத்தில் ஒன்று கூடிய பிரதேச மக்கள் ‘கடவுளின் சிலைகளை உடைத்தால் கடவுள் உங்களை அழித்துவிடுவார்’ ‘ மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழிக்காதீர்கள்’ “மதம் என்பது எமது உரிமை” “மதஸ்த்தலங்களை அழிக்காதீர்கள்’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,ஆலயத்தில் இடம்பெற்றிருந்த மேற்படி சம்பவம் தொடர்பாக ஆலய தலைவர் அறிந்து அதனை ஆலய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
பின்னர் ஆலய நிர்வாகம் குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குற்றவாளிகள் விரைவில் கைதுசெய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.