தமிழகத்தின் விழுப்புரம் அன்பு ஜோதி ஆச்சிரமத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ஆச்சிரம நிர்வாகியான ஜூபின் பேபி இன்று கைது செய்யப்பட்டார் விழுப்புரம் மாவட்டம் கெடார் குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆச்சிரமம் செயற்பட்டது.
அங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஆச்சிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் அளித்த பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆச்சிரமம் நடைபெற்று வருவது அம்பலமானதுடன் ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை அடைத்து வைத்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச் செயல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஆசிரமத்திலிருந்து இதுவரை 16 பேர் காணாமல் போயிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆச்சிரமத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பில் முக்கிய குற்றவாளியான ஆச்சிரம நிர்வாகியான ஜூபின் பேபி இன்று கைது செய்யப்பட்டார் .இந்நிலையில் ஆச்சிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின், ஆச்சிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.