அவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் வாழும் நகரமாக மெல்போர்ன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது.
19ஆம் நூற்றாண்டின் தங்க அகழ்வுக்குப் பின்னர், முன்னெடுக்கப்பட்ட எல்லை மாற்றத்தைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் அதிக சனத்தொகை கொண்ட நகரமாக மெல்போர்ன் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் – சிட்னி நகரமானது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிக சனத்தொகை கொண்ட நகரமாக காணப்பட்டது. எனினும், மெல்போர்ன் நகரத்துடன், மெல்டன் புறநகர் பகுதியையும் இணைக்கப்பட்ட பின்னர் மெல்போர்ன் சனத்தொகை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களின் படி, 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் சிட்னியின் சனத்தொகையை காட்டிலும் மெல்போர்னின் சனத்தொகை 18,700 பேரால் அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரம் என்ற பெருமையை மெல்போர்ன் கைப்பற்றுவது இது முதல் முறை அல்ல.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், விக்டோரியா மாநிலத்திற்கு புலம்பெயர்ந்தோர்கள் வருகைத் தந்ததையடுத்து அங்கு முன்னெடுக்கப்பட்ட தங்கம் அகழ்வின் விளைவாக, மெல்போர்ன் 1905 ஆண்டு வரை சிட்னி நகரத்தை விடவும் சனத்தொகையில் முன்னிலையில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.