இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு அத்தியாவசிய உணவுப்பொருளான சர்க்கரைக்கும் ஏற்றுமதி தடை அறிவிக்கப்படலாம் என கவலைகள் வெளிப்படுகின்றன.
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதியை இந்தியா கட்டுப்படுத்திய பிறகு, மற்றொரு முக்கிய பயிரான சர்க்கரையின் ஏற்றுமதியும் ஆபத்தில் இருக்கக்கூடும் என்று வணிகர்கள் கவலை கொண்டுள்ளனர்.
உலகளாவிய விநியோகங்கள் இறுக்கமடைந்ததால், பல நாடுகள் தெற்காசிய நாடுகளின் சர்க்கரை ஏற்றுமதியை அதிகம் சார்ந்து வருகின்றன. இதனிடையே, இந்தியாவின் விவசாயப் பகுதிகளில் சீரற்ற மழைப்பொழிவு காணமாக, உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய சர்க்கரை உற்பத்தி போதுமானதாக இருக்காது என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது.
அக்டோபரில் தொடங்கி தொடர்ந்து இரண்டாவது பருவத்தில் தொடர்ந்து சர்க்கரை உற்பத்தியில் சரிவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதித் திறனைக் குறைக்கும் என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விநியோகத்தைப் பாதுகாக்கவும், விலையை பராமரிக்கவும், பாஸ்மதி அல்லாத அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதியை அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்படுத்தியுள்ளது. மோசமான வானிலை மற்றும் உக்ரேனில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக ஏற்கனவே அழுத்தத்தில் உள்ள உலகின் உணவுச் சந்தைகளில் இது மேலும் அழுத்தத்தைச் சேர்த்துள்ளது.
இருப்பினும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் கரும்பு உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளில் ஜூன் மாதத்தில் போதுமான மழை பெய்யவில்லை, இது பயிர் அழுத்தத்திற்கு வழிவகுத்தது என இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (ISMA) தலைவர் ஆதித்யா ஜுன்ஜுன்வாலா கூறியுள்ளார்.
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டை விட 3.4 சதவீதம் குறைந்து 2023-24ல் 31.7 மில்லியன் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜுன்ஜுன்வாலாவின் கூற்றுப்படி, உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியா ஏற்கெனவே சர்க்கரை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியுள்ளது. முந்தைய சீசனில் 11 மில்லியன் டன்களாக இருந்த சர்க்கரை ஏற்றுமதி, 2022-2023 சீசனில் 6.1 மில்லியன் டன்களாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த சீசனில் இரண்டு முதல் மூன்று மில்லியன் டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர், இதனால் உலகளாவிய சர்க்கரை விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.