அமெரிக்காவின் மேற்கு மாகாணமான கலிபோர்னியாவில் கடுமையான பனிப்புயல் வீசியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அங்கு மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாக மாகாணம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவுடன், மழையும் கொட்டி வருகிறது. அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரான லாஸ் ஏஞ்சல்ஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீதிகளெங்கும் பனித்துகள்கள் பல அடி உயரத்துக்கு குவிந்து கிடக்கின்றன.மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.
அதேபோல் புகையிரத வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைபோல் குவிந்து கிடப்பதால் புகையிரத சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.புயலின் போது ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் இருளில் தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பனிப்புயல் காரணமாக கலிபோர்னியா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.