தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நாம்பள்ளியில் பஜார்காட்டில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் கீழ் தளத்தில் கார் மெக்கானிக் ஷாப் உள்ள நிலையில் மீதமுள்ள நான்கு மாடியில் குடியிருப்பு வீடுகளில் பலர் வசித்து வருகின்றனர். இதே இடத்தில் கட்டிட உரிமையாளர் ரமேஷ் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமான பிளஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தும் ரசாயன தொழிற்சாலை உள்ளது. அதற்கான ரசாயனம் பல கேன்களில் கீழ் தளத்தில் இருப்பு வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை கார் ஒன்றை பழுது பார்த்துக் கொண்டு இருந்தபோது திடீரென ரசாயன கேன் தீ பிடித்து எரிந்தது. இதில் சுற்றிலும் தீ மளமளவென எரிந்து அடர்ந்த புகையுடன் நான்கு மாடிகளுக்கும் தீ பரவியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.