ராணுவம், கப்பற்படை, விமானப் படைகளில் இளம் வீரர்களை சேர்ப்பதற்காக, ‘அக்னி பாதை’ என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் 17 வயது முதல் 23 வயதுடைய இளைஞர்கள் முப்படைகளில் சேர விண்ணப்பிக்கலாம். தேர்ந் தெடுக்கப்படும் இளைஞர்கள் முப்படைகளில் 4 ஆண்டுகள் பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படும்.
அவர்களுக்கு மாதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்.
மேலும், நான்கு ஆண்டு பணி முடித்த பிறகு அக்னி வீரர்களில் 25 சதவீதம் பேர் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள்.
இந்தத் திட்டத்துக்குப் பல்வேறுமாநிலங்களில் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்னி வீரர்கள் திட்டத்தை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்திலும் சிலர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறும்போது, ‘‘நாட்டின்நன்மைக் காகவும், ராணுவத்தை வலுப்படுத்தவும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திட்டத்தில் நீதிமன்றம் தலையிட எந்தக் காரணமும் இல்லை’’ என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
முன்னதாக அக்னி வீரர்கள் திட்டத்தை எதிர்த்து கேரளா, பஞ்சாப், ஹரியாணா, பிஹார், உத்தராகண்ட் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
அந்த அனைத்து மனுக்களையும் டெல்லிஉயர் நீதிமன்றத்துக்கு மாற்றும்படி சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.